Saturday, December 15, 2012

இளையராஜா பற்றி வைரமுத்து


இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா? இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியுமா?

இளையராஜா பற்றி வைரமுத்து :


இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்த வனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவு -களுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவு களோடு நான் நித்திரை கொள்கிறேன்.

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.
ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.
என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய். உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது. வார்த்தை துடிக்கிறது; வைராக்கியம் தடுக்கிறது; வந்துவிட்டேன்.

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை. உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில். ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய். இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய். என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய். நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய். ஒரு கணம் திகைத்தேன். வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது. பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன. சினிமாக் கம்பெனிக ளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன். நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன். உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன். ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன். அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன். உன் அறிக்கை தான். ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தே தான். படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன். உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்! உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்! காரணமே இல்லையே. இது இருதயத்திற்கு ஆகாதே.

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய். இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே! இப்போது சொல்கிறேன். உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.மறுகணம் யோசித்து, வார்த்தை களில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

நீயும் நானும் சேர வேண்டுமாம். சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

வைரமுத்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரையுலக வாழ்க்கையிலும் சந்தித்த மனிதர்களில் தன்னை ஏதெனும் ஒரு விதத்தில் பாதித்தவர்களை பற்றி தனக்கே உரிய நடையில் எழுதியிருக்கும் புத்தகம் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கலைஞர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஏ.வி.எம். சரவணன், சாலமன் பாப்பையா என நமக்கு தெரிந்தவர்கள் பற்றிய...

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வைரமுத்து.
219 பக்கங்கள்.
ரூ. 70.
சூர்யா லிட்ரேச்சர் லிமிடெட்.
திருமகள் நிலையம்.
தெரியாத விஷயங்களை, அவர்களின் உயர்ந்த பண்புகளை சிலாகித்து, சிலாகிக்க வைக்கிறது வைரமுத்து எழுத்துக்கள்.

வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள் எப்பூடிவலைப்பூவிலிருந்து

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைரமுத்துவின் 'கவிதை தொகுப்பில்' இடம் பிடிக்காததால் இதற்கு முன்னர் நான் அந்த கவிதையை பார்க்கவில்லை. ஆனால் அதை பார்த்த கணத்திலிருந்து சில சந்தேகங்களை வைரமுத்து அவர்களிடம் வசன நடையில் கேட்கவேண்டும் போல் தோன்றியது. அந்த சந்தேகங்களை இந்த பதிவில்ன் மூலமாக வைரமுத்து அவர்களிடம் அல்லது அவரின் தீவிர வெறியர்களிடம்...

வைரமுத்து அய்யா....

உங்கள் தமிழ்மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு சென்றாலும் உங்கள் மீதுள்ள மரியாதை வரவர குறைவடைந்து கொண்டே செல்கிறது. கவிஞருக்குரிய மிடுக்கு உங்கள் தோற்றத்தில் இருந்தாலும் உங்கள் நடத்தையில் இல்லைபோல் தெரிகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்,

1 ) உங்களை கலைஞர் அவைப்புலவர் ஸ்தானத்தில் வைத்திருந்தபோது நீங்கள் ஜெயலிதாவை பாராட்டியதற்காக உங்கள் இடத்திற்கு புதிதாக பா. விஜயை நியமிக்க அவருக்கு 'வித்தாக கலைஞர் ' பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கிய நாளிலிருந்து நீங்கள் விட்ட இடத்தை பிடிக்க கலைஞர் துதிபாடாத இடமில்லை, ஏனென்றால் உங்களுக்கு ஆட்சிபலம் தேவை.

2 ) இளைய கவிஞர்களில் யாராவது ஒருவருடன் நல்லுறவு வைத்துள்ளீர்களா? அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கிரிகளா? அதற்கு பதிலாக "இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" என்ற பாடல் வரிகளை எழுதி அல்லவா உள்ரிர்

3 ) கண்ணதாசனின் 'கவியரசர்' பட்டத்திற்குமேல் ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக 'கவிப்பேரரசு' என அடைமொழி வைத்து உங்கள் தரத்தை குறைத்து கொண்டவர்தானே நீங்கள்?

4 ) சரணின் அனைத்து படங்களுக்கும் பாட்டு எழுதுவது நீங்கள்தான் என்பதால் சரண் கேட்டால் எதையும் எழுதிக்கொடுத்து விடுவீர்களா? உங்களுக்கு பணம் தந்தாள் யாரை பற்றியும் கேவலமாக விமர்சிப்பீர்களா? இல்லாவிட்டால் விஜயை பார்த்து அஜித் "எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை" என பாடும் கீழ்த்தரமான வரிகளை எழுதியிருப்பீர் களா? இன்று அதே சரணின் 'அசல்' திரைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் "உன்போல சிலர் இன்று உருவாகலாம் , உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா? " என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக பணத்துக்கும் சரணின் அடுத்த படவாய்ப்புக்கும்தானே?

இப்படி உங்களிடம் கேட்க பல சந்தேகங்கள் இருந்தாலும் 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' புத்தகத்தில் நீங்கள் ராஜாவிற்கு எழுதிய கவிதையில் இருந்து சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.


இசை ஞானியே! , என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை,உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

உண்மைதான் யாரையும் நம்பி யாரும் இல்லைதான், ஆனால் இளைய ராஜா இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று நினைக்கும் போது எனக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. உங்களுக்கு 1981 இல் இளையராஜா நிழல்கள் திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் எப்படி உங்களை வெளிக்கொண்டு வந்திருப்பீர்கள்? சந்திரபோஸ், சங்கர் கணேஷ், 1980 களின் பின்னர் எம்.எஸ்.வி என எப்போதாவது ஒரு படத்தின் பாடல்கள் பிரபல்யமாகும் இசையமைப்பாளர்களின் மூலம் உங்களை நிரூபித்திருக்க முடியுமா?

ரகுமானின் வருகையின் பின்னர் வைரமுத்து அவர்கள் தன்னை நிரூபித்திருப்பார் என்று கூறும் உங்கள் ஆதரவாளர்களுக்கு ரகுமான் ஆரம்பகாலங்களில் பிரபல்யமான பாடலாசிரியர்களைதான் பயன்படுத்தி னார் என்பது தெரியாதென்று நினைக்கிறேன், அதனால்தான் தனது ஆரம்பகால படங்களுக்கு உங்களையும் 'வாலி அய்யா' அவர்களையும் பயன் படுத்தினார். இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா? இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியுமா? நீங்கள் கேட்கலாம் ராஜாவிற்கு எனது பாடல்கள் பலமில்லையா என்று , உண்மைதான் உங்கள் இருவரது கூட்டணியில் உருவான பாடல்கள் போல் ஒருபோதும் பாடல்கள் வராதென்பது எனது கருத்து. ஆனால் நீங்கள் இல்லாவிடாலும் பாட்டெழுத வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் என நிறைய கவிஞர்கள் இருந்தார்கள் ஆனால் உங்களுக்கு ராஜாவை விட்டால்?

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்,நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்,உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்,மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்,ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய், இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்,என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

எதற்காக அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பினாரென்று நீங்கள் கடைசிவரை கூறவே இல்லை, அதுதவிர உங்களுக்கு இத்தனை நன்மை செய்த இளைய ராஜா ஒரு காரணமும் இல்லாமலா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப் பார்? இளையராஜாவின் குணம் உங்களுக்கு அதுவரை தெரியாதா? அவர் நோட்டிஸ் அனுப்பினாலும் அந்த பிரர்ச்சினையை பேசித்தீர்க்கவேண்டியது நீங்களா அல்லது இளையராஜாவா? பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாதுள்ளதே, இறுதியாக அந்த வக்கீல் நோட்டிஸ் என்னவானது என்பதை தயவு செய்து கூறமுடியுமா?


உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்,உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்,காரணமே இல்லையே.

காரணமில்லாமல் கோவப்பட இளையராஜா என்ன மனநலம் பாதிக்கபட்ட வாரா? அல்லது சிறு குழந்தையா ? அப்படிஎன்றால்கூட நீங்கள் அவரை விட்டு விலகியிருக்ககூடாதே? இளையராஜா மீது முழுவதும் குற்றம் சுமத்தும் நீங்கள் இளையராஜாவுக்கு ஒருதீங்கும் செய்யவில்லையா? நீங்கள் அம்புட்டு நல்லவரா?

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்,ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இங்குதான் எனக்கு சில சந்தேகங்கள், இளையராஜா அப்படி சொன்னதாகவே இருக்கட்டும் அது உங்களுக்கு எப்படி தெரியும்? கமல் வந்து சொன்னாரா? அப்படியென்றால்றால் கமல் 'புறம்' பேசுபவரா ? ராஜா பேச்சை கேட்டு உங்களுக்கு வரவிருந்த வாய்ப்பை நிறுத்துகிறார் என்றால் கமல் சொந்தமாக சிந்திக்க மாட்டாதவரா? அல்லது ராஜாவை நம்பித்தான் கமல் இருக்கிறாரா? கமல் ராஜாவின் நண்பன் என்றால் நண்பன் சொன்னதை வேறொருவரிடம் பொய் கொள்மூட்டுபவரா? அல்லது கமல் உங்கள் நண்பன் என்றால் உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை பற்றி சொன்னதை உங்களிடம் சொல்லுமளவிற்கு நாகரிகம் தெரியாதவரா ? பின்னர் நீங்கள் எத்தனை படங்களுக்கு திரைக்கதை எழுதினீர்கள்? தொடர்ந்தும் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இளையராஜா தடுத்துவிட்டாரா? அல்லது உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள ராஜாவை வில்லனாக்குகிரீர்களா?

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!,இப்போது சொல்கிறேன்,உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்,ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்க வில்லை.

இளையராஜாவின் பாசறையில் அம்புகள் மட்டுமே தயாரிகட்டும் ,ஆனால் உங்களின் இந்த கவிதையை பார்த்தால் நீங்கள் பேனாவால் 'விஷ அம்பை' ராஜாமீது எய்துள்ளது போலல்லவா தெரிகிறது. விஷ அம்பு எப்படி கேடயமாகும்?


உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்,உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமை யேற்க சொன்னார்கள்,நான் கொதித்தேன், "அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

வைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்றதற்கு நன்றி! ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா? சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதி -ல்லையாமே? இது உண்மையா?


நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை,இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

நீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது, தமிழ் இருக்கும் வரை அவர் இருப்பார். உங்கள் இயற்தமிழிலும் பார்க்க அவரது இசைத்தமிழுக்கு ஆயுள் அதிகம்.

நீயும் நானும் சேர வேண்டுமாம்,சில தூய இதயங்கள் சொல்லுகின்றன, உனக்கு ஞாபகமிருக்கிறதா?,‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம், திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.,நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்,மழை வந்தது,நின்று விட்டேன்,என்னை நீ பிடித்து விட்டாய்,அப்போது சேர்ந்து விட்டோம்,ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்,இப்போது முடியுமா? இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

நீங்கள் வேறுவேறு திசையில் ஓடினாலும் வட்டப்பாதையில் ஓடுவதாக அல்லவா நாம் நினைத்தோம் , ஆனால் நீங்கள் நேர்கோட்டில் ஓடுவது எனக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கவிதையை படித்த பின்னர்தான் தெரிந்தது , உங்களுக்கு தேவையென்றால் வளைந்து நெளிந்த பாதையிலும் போகும் நீங்கள் இன்று உங்களுக்கு தேவைப்படாத ராஜாவிற்கு எதிர்த் திசையில் நேர்கோட்டில் ஓடுவதில் ஆச்சரியமில்லை. ஓடுங்கள், நன்றாக ஓடுங்கள், பணத்துக்காகவும் புகழுக்காகவும் ஜால்றாக்காகவும் கூட இருப்பவர்களையும் ,நண்பர்களையும் தூக்கிஎறிந்துவிட்டு இப்படியே ஓடினால் நீங்கள் மட்டும்தான் கடைசியில் மிஞ்சுவீர்கள்.


ஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார்,பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை கண்ணதாசன் என ஒரு பெரும் பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளைய ராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக் கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்.

வைரமுத்துவை விமர்சிக்க உனக்கென்ன தகுதி இருக்கிறது என்பவர்களுக்கான விடை "இளையராஜாவின் ரசிகன் என்கிற தகுதியும், வைரமுத்துவின் தமிழுக்கு [மட்டும் ] ரசிகன் என்கிற தகுதியும் போதுமானது என்பது எனது தாழ்மையான கருத்து ...


♫ ♫ உலகத்தை ஆள


♫ ♫ உலகத்தை ஆள
செங்கோல் தேவையில்லை
ஒரு புல்லாங்குழல் போதுமென்று
நிரூபித்தவன் நீ

சூரியனும் சந்திரனும்
உனது இசைத் தட்டுகள்
உன் ஆர்மோனியத்தின்
கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கிடையில்தான்
கட்டுண்டு கிடக்கின்றன
எங்கள் இரவும் பகலும்

வானில்
பறவைகள்
சிறகுகளால் எழுதும்
உனது இசைக்குறிப்புகளை
பூமியில்
பூக்கள் இசைப்பதைத்தான்
நாங்கள்
வசந்தகாலம் என்கிறோம்

இங்கே
சருகுகளில்
சப்திப்பதும்
உன் சங்கீதம்தான்

உன் ஆரோகணம்
மேகம்
உன் அவரோகணம்
மழை

நீயின்றி அமையாது உலகு

நீ இசைக்கத் தொடங்குகிறாய்
உன் ஆர்மோனியத்தின்மேல்
காட்டு மரங்கள் அசைகின்றன
காதல் பறவைகள் கூடுகின்றன
ஒழுகும்
உன் இசையின் ஜீவநதியில்
கடவுள்
குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்

என்ன அழகான
ஒரு பின்னணி இசை இது...

நீ கடவுளைப் பார்த்துக்கொண்டிருக்க
நாங்கள் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க...

இளையராஜாவை கவுரவிக்க 1000 கிலோ எடையில் 100 மீட்டர் மெகா கேக்!

இளையராஜாவை கவுரவிக்க 1000 கிலோ எடையில் 100 மீட்டர் மெகா கேக்!
சென்னை: இந்தியாவின் பிரபல கேக் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இளையராஜாவைக் கவுரவிக்க 1000 கிலோ எடை கொண்ட, 100 மீட்டர் மெகா கேக் ஒன்றை தயாரித்து வருகிறது.
அந்த கேக்கில் இளையராஜாவின் 1
000 புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

முட்டை கலக்காமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சைவ கேக்கில், இளையராஜா தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த அன்னக்கிளி தொடங்கி, அவர் நடத்திய கச்சேரிகள், சமீபத்திய ரிலீசான நீதானே என் பொன்வசந்தம் வரை புகைப்படங்களை தேதி வாரியாக அதில் இடம்பெறச் செய்கின்றனர்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் இந்த கேக் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்வைக்கு வைக்கப்படுகிறது. வாழ்த்துக்கள்!!

இந்த கேக்கை 25 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது. 600 கிலோ சாக்லேட், 150 கிலோ பிரஷ் க்ரீம், 80 கிலோ சர்க்கரை, 240 கிலோ கறுப்பு சாக்லேட், 100 கிலோ வெள்ளை சாக்லேட், 60 கிலோ ஜெல் மற்றும் 600 சர்க்கரை ஏடுகள் கொண்டு இந்த கேக்கை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தக தலைவர் விபுல் மெஹ்ரோதா கூறுகையில், "ஒரு சமூக சேவை நோக்கில் இந்த கேக்கை தயாரித்துள்ளோம். கண்காட்சிக்குப் பின்னர், ஒரு சமூக நல அமைப்பிடம் இந்த கேக்கின் விற்பனை உரிமையை வழங்கவிருக்கிறோம்," என்றார்.

முட்டை கலக்காமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சைவ கேக்கில், இளையராஜா தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த அன்னக்கிளி தொடங்கி, அவர் நடத்திய கச்சேரிகள், சமீபத்திய ரிலீசான நீதானே என் பொன்வசந்தம் வரை புகைப்படங்களை தேதி வாரியாக அதில் இடம்பெறச் செய்கின்றனர்.
வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் இந்த கேக் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இந்த கேக்கை 25 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது. 600 கிலோ சாக்லேட், 150 கிலோ பிரஷ் க்ரீம், 80 கிலோ சர்க்கரை, 240 கிலோ கறுப்பு சாக்லேட், 100 கிலோ வெள்ளை சாக்லேட், 60 கிலோ ஜெல் மற்றும் 600 சர்க்கரை ஏடுகள் கொண்டு இந்த கேக்கை தயாரிக்கின்றனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தக தலைவர் விபுல் மெஹ்ரோதா கூறுகையில், "ஒரு சமூக சேவை நோக்கில் இந்த கேக்கை தயாரித்துள்ளோம். கண்காட்சிக்குப் பின்னர், ஒரு சமூக நல அமைப்பிடம் இந்த கேக்கின் விற்பனை உரிமையை வழங்கவிருக்கிறோம்," என்றார்.

புரட்ச்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன்..!!


950க்கும் மேற்பட்ட படம்கள், 5000பாடல்கள் என ஒரு இசை சாம்ராஜ்யம் செய்து கொண்டு இருக்கும் இசை கடவுள் இசை ஞானி அவர்களுக்கு இன்றும் மிக பெரிய வருத்தம் ஒன்று உள்ளது .அது என்னவென்றால் மக்கள் திலகம் டாக்டர் புரட்சி தலைவர் M.G.R அவர்கள் நடிப்பில்தான் இசை அமைக்க வில்லை என்று ஒரு மிக பெரிய வருத்தம் ஒன்று உள்ளது. M.G.R அவர்கள் கடைசியாக நடித்த படம் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் . அதன் பின்பு ஒரு படம் பூஜை போட்டார்கள் அதற்க்கு இசை ஞானி தான் இசை ஆனால் அதற்குள் M.G.R அவர்களுக்கு உடல் நலம் மிகவும் மோசமானதால் அந்த படம் எடுக்கவில்லை . கடைசியாக M.G.R அவர்களின் இறுதி ஊர்வலம் பொதிகை சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள் இசைஞானிதான் அந்த நேரடி காட்சிகளுக்கு பின்னணி இசை கொடுத்தார் .

" ராஜா ராஜாதான் "


ராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும் இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான் பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் முழுமை பெறுவதை மிக 
அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன்.

பிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும்.

ஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார். (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார்.

பின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே இருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வருவார். ஏற்கனவே அங்கே தயாராக இருக்கும் வாத்திய கலைஞர்கள் அதுவரை பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் அந்த அறையே சட்டென நிசப்தமாகும். அன்றைய தினம் ரிக்கார்டிங் செய்யப்பட வேண்டிய பாடலுக்கான பி.ஜி.எம். நோட்ஸை அங்கே உட்கார்ந்துதான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே எழுதுவார் ராஜா சார். சம்பந்தப்பட்ட வாத்திய இசைக்காரர்கள் அதைப் பார்த்து தங்களுக்கான நோட்ஸை மட்டும் எழுதிக் கொள்வார்கள். கீ போர்டு, பேஸ் கிடார், எலக்ட்டிரிக் கிடார், வயலின், தபேலா, செல்லோ, சாக்ஸஃபோன், வீணை, டிரம்ஸ், புல்லாங்குழல் இப்படி அந்தப் பாடலுக்கு எது தேவையோ அவர்கள் மட்டும் வந்திருப்பார்கள்.

வயலின் கலைஞர்கள் மட்டுமே சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணும் இருப்பார். இப்போது காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நுழைவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நோட்ஸை குறித்துக் கொள்வார், வாசிப்பார், ரிக்கார்டிங் முடிந்து முழுப்பாடலையும் கேட்டு ராஜா சார் ஓக்கே சொன்னதும் வயலினை அதன் பெட்டிக்கும் லாவகமாக வைத்துப் பூட்டினால் அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.

வயலின் கலைஞர்களோடு சேர்த்து ஒரு பாடலுக்கு எண்பது பேர் வரை என்று அந்தச் சபை இசையால் நிரம்பி வழியும். நோட்ஸ் எடுத்துக் கொள்ள அரைமணி நேரம்தான் கொடுப்பார் ராஜா சார். ரிகர்சல் போலாமா என்று மைக்கில் கேட்பார். வாத்தியங்கள் வாரியாக ரிகர்சல் ஆரம்பிக்கும். முதலில் வயலின். ஐம்பது வயலின் எல்போக்களும் ஒரே மாதிரி உயர்ந்து தாழ்ந்து அன்றைய இசை மழையை ஆரம்பித்து வைக்கும். கண்ணாடி அறைக்குள் ரிக்கார்டிங் என்ஜினியர் அருகே அமர்ந்திருக்கும் ராஜா சார் அதைக் கவனமாகக் கேட்பார். சீட்டிலிருந்து எழுந்து ஒருத்தரை மட்டும் அடையாளம் காட்டி அவரை மட்டும் அந்த நோட்ஸை திரும்ப வாசிக்கச் சொல்லுவார். அவரது வாசிப்பில் எதோ ஒரு குறை இருப்பதை சுட்டிக்காட்டி நோட்ஸை சரியாகப் படித்து திருத்திக் கொள்ளச் சொல்வார். ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.

பின்னர் ரிதம் செக்‌ஷன் ரிகர்சல், தபேலா, ஃபேஸ் கிடார் என்று தனித்தனியாக வாசித்து ராஜா சாருக்கு திருப்தி என்றதும் அனைத்து கருவிகளுடனும் மொத்தமாக ஒரு ரிகர்சல் நடக்கும். அது முடிகிற போது நேரம் சரியாக காலை பத்து மணி ஆகியிருக்கும்.

டிபன் பிரேக்.

அரைமணி நேரத்தில் அனைவரும் திரும்பி வந்து ரிக்கார்டிங் போக தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ரிகர்சல். கீ போர்டு வாசிக்கும் ஜிஜி மானுவேலோ, புருசோத்தமனோ ராஜா சாரின் நோட்ஸ் பார்த்து கண்டக்ட் செய்ய அத்தனை வாத்தியங்களும் மூன்று நிமிஷ நேரம் உற்சாக பீறிட இசையை வெளிப்படுத்தி குதூகலிக்கும் காட்சி ஆகா. அடுத்த ஒன்றரை மணியில் மொத்த ரிகர்சலும் ஓக்கே. இனி ரிக்கார்டிங்தான். அது கூட டிராக் மூலம்தான் என்பதால் ஒவ்வொரு செக்‌ஷனாக வாசிக்க வாசிக்க பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்ஜினியர். அருகிலிருந்து அதில் மாற்றமோ ஏற்றமோ சின்னச் சின்னதாய செய்து கொண்டிருப்பார் ராஜா சார். முழுசாக அந்தப் பாடல் எப்படி வரப்போகிறது என்பது அப்போதுவரை அருகிலிருந்து கேட்பவருக்கு அதுவரை தெரியாது.
அந்தப் பாடலுக்கு யார் பாட வேண்டும் என்று ஏற்கனவே ராஜா சாரால் சொல்லப்பட்டிருந்த பாடகரோ பாடகியோ உள்ள வந்து ராஜா சாருக்கு ஒரு வணக்கம் வைப்பார்கள். அப்போது மணி சரியாக பன்னிரெண்டு இருக்கும். பின்னர் வாய்ஸ் மிக்ஸிங். முதலில் டியூனுக்கான நோட்ஸ்களை பாடகர் எழுதிக் கொள்வார். அந்த இடைவெளியில் ஏறகனவே பாடலாசிரியரால் எழுதப்பட்டு வந்திருக்கும் பாடல் வரிகளை ராசா சாரிடம் கொடுப்பார் அந்தப் படத்தின் இயக்குனர். ட்யூனுக்கு வரிகள் ஒத்துப் போகிறதா என்பதை ஒருமுறை பாடிப்பார்த்துக் கொள்ளும் அவர் அதை பாடகரிடம் அனுப்பி வைக்க ட்யூனோடு அந்தப் பாடல் வரிகளையும் தங்கள் டைரியில் எழுதிக் கொள்வார் பாடகர். எஸ்.பி.பி. இதற்கென தனியாக ஒரு பெரிய டைரியே வைத்திருப்பார். அந்தப் பாடலின் வரிகளை தெலுங்கில் எழுதிக் கொள்ளும் அவர் அந்தப் படத்தின் கம்பெனி, டைட்டில், ரிக்கார்டிங் தேதி, அது தனக்கு எத்தனையாவது பாடல் என்பது உட்பட அனைத்தையும் அதில் குறித்துக் கொள்வார். 

இதெல்லாம் முடிகிற போது சுமார் ஒரு மணி ஆகியிருக்கும். பாடல் வரிகளை மட்டும் ஒருமுறை பாடச் சொல்லி கேட்கும் ராஜா சார் அதில் சில சங்கீத பாஷையில் சில அறிவுரைகளை வழங்குவார். ஒருமுறையோ இரண்டு முறையோதான் அதற்கான ரிகர்சல். உடனே டேக். ஏற்கனவே ரிக்கார்டிங் செய்யப்பட்ட பி.ஜி.எம் டிராக்கோடு பாடகரின் வாய்ஸையும் சேர்த்து ஒருமித்த ஒரு பாடலாக ஒலிக்கச் செய்வார் என்ஜினியர். அடடா அதுதான் அற்புத நிமிடங்கள்....

காலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம். இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை அவர் வடித்தெடுத்த வேளைகளில் உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....

நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்......

ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்....

மறக்க முடியாத நினைவுகள்




”சின்னத்தம்பி” படத்தில், வெளியுலகையே பார்த்திராத கதாநாயகி முதல்முதலாக நாயகனுடன் வெளியே வந்து சுற்றிப்பார்ப்பதுபோல ஒரு காட்சி. இந்தப் பாடலின் கம்போஸிங்கின்போது யாருமே உடனில்லை. ராஜா சார் மட்டும்தான் இருந்தார். நான் Situation சொல்லிமுடித்த அட
அடுத்த நிமிடமே, உடனடியாக தனது ஆர்மோனியத்தில் பாடலின் மெட்டை வாசித்து, ஆர்மோனியத்திலேயே விரல்களால் தாளமும் போட்டுக்கொண்டு, ‘போவோமா ஊர்கோலம்…? என்று Lyric’ஆகவே ஆரம்பித்து’ முழு பாடலையும் Compose செய்து முடித்துவிட்டார். Recordingம் முடிந்தது.
பின்னர் நான் பாடலை Picturise பண்ணிமுடித்தேன்.

கதாநாயகி முதன்முதலாக வெளியே வந்து பறவைகளைப் பார்ப்பதோ, சேற்றில் கால்வைப்பதோ… அவர் எனக்குக் கொடுத்த இசைக்கு நான் Shots எடுத்திருந்தேன் அவ்வளவுதான். பாடலைப் பார்த்தார்…!! ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்..!! பறவைகளின் ஒலியுடன், Keyboard’ல் துவங்கி, புல்லாங்குழலுடன் பாடலின் Prelude பயணிக்கிறது. படமாக்கிக் கொண்டு சென்றிருந்த பாடலைப் பார்த்துவிட்டு… “இல்லை.. இவள் முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. அதற்கு இந்த Prelude மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் Extra’வாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்..!! நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா..?” என்றார். உடனே நான் ப்ரசாத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவிற்குச் சென்று, இந்தப் பாடலின் நிறைய Shots’ஐ Edit பண்ணி ஒரு 80 அடிக்குக் காட்சிகளை எடுத்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.

அப்படி நான் கொடுத்த காட்சிகளுக்கு அவர் ஒரு Violin Score எழுதி அமைத்துத்தந்தார். படத்தில், அந்த வயலின் இசை முடிந்து அதன்பின்னர் ’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude துவங்கும். பாடலின் முன்னர் வரும் அந்த வயலின் இசையுடன் அதைப் பார்த்தவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.

- இயக்குனர் திரு. பி.வாசு அவர்கள் விஜய் டி.வி.யின் ”இதயம் தொட்ட இசைஞானி” நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது.

’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude’ஐயும், Prelude’க்கு முன்வரும் அந்த இசையையும் இதில் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் உடல் சிலிர்க்கும்.