Friday, October 24, 2014

இளையராஜா - 3

சிச்சுவேசன் சொன்னதுமே, 'மாங்குயிலே.. பூங்குயிலே..' பாடலுக்கான நோட்ஸை 15 நிமிடங்களில் எழுதி முடித்து, கம்போசிங் போகலாம்' என எழுந்தவர் இளையராஜா. 1000 படங்களுக்கு இசையமைத்தவரின் இசைப் பயணத்தில் பாடகர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் என எத்தனையோ பேர் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போதுவரை ஒலிப் பதிவுக்கூடத்தை அவர் மாற்றவே இல்லை. பிரசாத் லேப் ஸ்டுடியோவின் ஒட்டுமொத்த வளாகமே மாறிவிட்டாலும், ராஜாவின் ஆடியோ ஸ்டுடியோ மட்டும் பழமை மாறாமல் பராமரிக்கப்படுகிறது. 



நினைத்த மாத்திரத்தில் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றுவிடுவார்.
அந்த ஊரின் மலையடிவாரத்தில் யாரையோ பார்த்து, 'என்ன இது..
இளையராஜா மாதிரி தெரியுதே' என உங்களுக்குத் தோன்றினால், சந்தேகமே
வேண்டாம்... அது ராஜாவேதான்.

அதிகாலையில் ஸ்டுடியோவுக்கு வருபவர், நாள் முழுவதும் இசையிலேயே இருப்பார். மாலை வீட்டுக்குச் சென்று தியானம், பூஜை, பேரப் பிள்ளைகளுடன் விளையாட்டு என இளைப்பாறுவார். எப்போது படிக்கிறார் எனத் தெரியாது. ஆனால், தமிழின் சமீப நூல்களை வாசித்து முடித்திருப்பார். எப்போதும் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.

தன் அண்ணன் பாவலர் வரதராஜனின் நினைவு நாள் அன்று அசைவத்தைத் துறந்தவர், கடந்த 30 ஆண்டுகளாக சுத்த சைவம். உணவில் எப்போதும் வேண்டும்.. ரசம்.. தான் இசையமைத்த பாடல்களை ரிலாக்ஸ் மூடில் முணு முணுப்பது, அதைப் பற்றி பேசுவது என்பதெல்லாம் அபூர்வம்.

ஊர் உலகத்தில் உள்ள இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் ஆதர்சம்,
இசைஞானி இளையராஜா. ஆனால், இவரின் ஆதர்ச இசையமைப்பாளர் யார்?
என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த 'மணமகள்' படத்தின் இசையமைப்பாளர்
சி.ஆர்.சுப்பாராமன். பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' பாடலுக்கு இசைய மைத்தவர் சுப்பாராமன்.

Monday, July 21, 2014

இளையராஜா - 2

ஆரம்பத்தில் தந்தையின் பெயரோடு ஒட்டிக் கொண்ட டேனியல் என்பது மகன்களின் பெயரோடு ஒட்டிக் கொண்டது. எனவே சினிமாவுக்கு முன்பெல்லாம் இளையராஜா 'டேனியல் ராஜையா' என்றே அழைக்கப்பட்டு வந்தார். இளமையில் இவரின் உள்ளத்திலும் உணர்விலும் நாட்டுப்புற இசை கலந்துவிட காரணமானது, பண்ணைப் புரத்து தோட்ட வேலை செய்யும் பெண்களும், கிராமத்து வயல்வெளியில் நாற்று நடும் பெண்களும் பாடும் மண்ணின் மனமுள்ள பாடல்கள்தான் எனச் சொல்லலாம்..!!

ஆற்றில் நீச்சலடித்தும் பட்டம் பறக்க விட்டும் விளையாடும் சின்ன வயதில் மூங்கில்களை வெட்டி, சின்ன சின்னதாய் புல்லாங்குழல்கள் செய்து வாசித்து மகிழ்ந்தவர் இளையராஜா. பாவலர் வரதராஜன் இருந்தவரை அவர் குழுவில் இருந்த சகோதரர்கள். பாவலரின் மறைவுக்குப் பின் சென்னைக்கு சினிமா வாய்ப்புதேடி இசை சகோதரர்கள் பட்டிணப் பிரவேசம் செய்தனர். கனவுகளுடன் வந்தவர்களுக்கு வசந்தம் எளிதில் கிட்டவில்லை. வாய்ப்பு தேடி அலைச்சல், வறுமை என நாட்கள் நகர்ந்தன. எப்போதாவது கிட்டும் கச்சேரி வாய்ப்பு, அவ்வப்போது தொண்டை நனைத்துக் கொள்ளவும், கால் வயிற்றுக்கேனும் உதவியது.

வசதிகள் வரும்போது விரிசல்கள் வரும். ஆனால் வறுமை சேர்ந்திருக்
கவும், சேர்த்து உழைக்கவும் உத்வேகம் கொடுக்கும். வறுமையிலும் பாவலர் சகோதரர்களிடம் ஒரு அபூர்வமான பழக்கம் இருந்தது. சாப்பிட்டால் மூவரும் சேர்ந்தே சாப்பிடுவது, இருவர் பட்டினி கிடக்க வெளியே சென்ற ஒருவருக்கு
விருந்தே கிடைத்தாலும் மற்ற மூவரை விட்டு சாப்பிடுவதில்லை. அப்போது அவர்கள் என்னதான் பசியால் காய்ந்திருந்தாலும், அவர்களின் நம்பிக்கை மட்டும் காயாமலிருந்தது..!!

Tuesday, July 15, 2014

இளையராஜா - 1


தமிழகமெங்கும் பேசப்படும் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. அவரது தந்தை எம்.ஆர்.ராமசாமி. பிறப்பால் ஒரு இந்துவாக இருந்த ராமசாமி கிருஸ்துவ ராக மதம் மாறியவர். தனது பெயரை டேனியல் ராமசாமி என வைத்துக் கொண்டவர். ஒரு விவசாயியான பண்ணைபுரத்து டேனியல் ராமசாமிக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவி சின்னத்தாயி அம்மாள். அவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள்.

பாவலர் வரதராஜன், பாஸ்கர், ராஜையா, அமர்சிங் என்பதே அந்த நான்கு மகன்கள். அன்றைய ராஜையாதான் இன்றைய இளையராஜா. அன்றைய அமர்சிங்தான் இன்றைய கங்கை அமரன்..!!

ஆரம்பத்தில் தந்தையின் பெயரோடு ஒட்டிக் கொண்ட டேனியல் என்பது மகன்களின் பெயரோடு ஒட்டிக்கொண்டது. எனவே சினிமாவுக்கு முன்பெல்லாம் இளையராஜா "டேனியல் ராஜையா" என்றே அழைக்கப்பட்டு வந்தார்.